வியாழன், 29 ஜனவரி, 2009

குறுங்கவிதைகள்

தன் வாய்நூலாலேயே
அழிவு தேடுகிறது
பட்டுப் பூச்சி
 
-------------------------------------------
 
ஓடத் தெரியாது
என்றாலும் சிறை
கோலத்துள் புள்ளி.
 
-------------------------------------------
 
குடிசை வாழ் மக்களெல்லாம்
சேர்ந்து கட்டினார்கள்
சலவைக்கல் பதித்த சக்தி கோயில்
 
-------------------------------------------
 
ஏராளமான கடைகள்
தமிழ் விற்க..
எவருமில்லை காப்பாற்ற
 
-------------------------------------------
 
தட்டேந்திக் காத்திருக்கிறார்கள்
பார்ப்பனனும் சூத்திரனும்
கோயிலுக்கு உள்ளேயும் வெளியேயும்
 
-------------------------------------------
 
லாரிகளில் ஏறுகின்றன மாடுகள்
வயல்களில் இறங்குகின்றன
டிராக்டர்கள்
 
-------------------------------------------
 
எத்தனை முறை மழித்தாலும்
வளர்கிறது மயிர்
ஆசையைப் போலவே
 
-------------------------------------------
 
விழுந்தது கண்ணாடி
ஒட்டவைக்க முடியாமல்
உடைந்தது மனம்
 
-------------------------------------------
 
வீட்டுக்காரன் செத்ததை எண்ணி
விக்கி அழுதன்
முட்டைப் பூச்சிகள்
 
-------------------------------------------
 
புண்ணாக்குக் கனவுகளை சுமந்தபடி
வலம் வருகின்றன
செக்கு மாடுகள்
 
-------------------------------------------
 
பெரிய ரீடர் பெரிய ரைட்டர்
பெரிய பொயட் பெரிய பெரிய ஆத்தர்
எல்லாம் இருக்கிறார்கள்
டமில் லிட்டரேச்சரில்
 
-------------------------------------------
 
வாலாட்டுகிறார்கள்
நன்றியுள்ள நாயும்
நன்றிகெட்ட மனிதனும்
 
-------------------------------------------
 
ஈடாக முடியாது
எத்தனை பெப்சியும் கோக்கும்
ஓர் இளநீருக்கு
 
-------------------------------------------
 
எண்சாண் உடம்பால்
எட்டுமணி நேர உழைப்பு
நிறையவேயில்லை ஒரு சாண் வயிறு
 
-------------------------------------------
 
முகம் சுளித்தது குழந்தை
பலூன் காற்றில்
பீடி நாற்றம்
 
-------------------------------------------
 
பூ விற்காததால்
வாடியது
பூக்காரி முகம்

கருத்துகள் இல்லை: